புதன், 29 டிசம்பர், 2010

கேள்விக்குறியாகும் பட்டுக்கோட்டை புறவழிச் சாலைத் திட்டம் - தினமணி

First Published : 29 Dec 2010 02:56:55 PM IST

Last Updated :



பட்டுக்கோட்டை, டிச. 28: பட்டுக்கோட்டை புறவழிச் சாலைத் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்ற வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுமார் 1 லட்சம் மக்கள்தொகை கொண்ட பட்டுக்கோட்டை நகரில், வருவாய்க் கோட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், பல்வேறு அலுவல் நிமித்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பட்டுக்கோட்டைக்கு வந்து செல்வதால், நகர வீதிகளில் பெரும்பாலான நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி வாகன விபத்துகளால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், பட்டுக்கோட்டையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பட்டுக்கோட்டையில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அண்மையில் அனுமதியளித்து உத்தரவிட்டது.

இதன்படி, பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஆலடிக்குமுளை கிராமத்தில் தொடங்கி சூரப்பள்ளம், ஆத்திக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை, அணைக்காடு வரை நிலங்களை கையகப்படுத்தி, 7.33 கி.மீ. தொலைவுக்கு 30 மீட்டர் அகலத்தில் புறவழிச் சாலை அமைக்கவும், இந்தத் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டது.

முதல் கட்டமாக அணைக்காடு கிராமத்தில் தொடங்கி பொன்னவராயன்கோட்டை, உக்கடை, பாப்பாவெளி பாளையக்கோட்டை வழியாக ஆத்திக்கோட்டை வரை 4.2 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கவும், 9 மாதங்களில் இந்தப் பணியை நிறைவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. இதில் தனியார் நிலங்களைக் கையகப்படுத்த ரூ. 2.78 கோடி, சாலைப் பணிக்கு ரூ. 7.22 கோடி பிரித்தளிக்கப்பட்டது.

இதனிடையே, நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு ஆதரவாகவே நீதிமன்றத் தீர்ப்புகள் அமைந்தன.

இதைத்தொடர்ந்து, முதல் கட்டமாக புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும், திட்டத்தைத் தொடங்குவது குறித்து சென்னை நெடுஞ்சாலைத் துறைச் செயலர் பரிசீலனை செய்து வருவதாகவும், விரைவில் புறவழிச் சாலைப் பணிகள் தொடங்கும் என்றும் நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, பட்டுக்கோட்டை புறவழிச் சாலை திட்டத்துக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால், இந்தச் சாலைத் திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது, சூரப்பள்ளம் பகுதியில் உள்ள- பட்டுக்கோட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான தென்னந்தோப்பின் பெரும் பகுதி புறவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ளது. எனவே, இதைத் தடுக்கும் வகையில், தொழிலதிபரின் உறவினருக்கு ஆதரவாக புறவழிச் சாலைத் திட்டத்தை சில மாதங்களுக்கு தொடங்காமல் இழுத்தடிக்கும் திரைமறைவு முட்டுக்கட்டை நடவடிக்கைகளில் இந்தப் பகுதி ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏனெனில், சில மாதங்கள் வரை சாலைத் திட்டத்தை தொடங்காமல் இழுத்தடித்துவிட்டால், அதற்குள் தேர்தல் ஆணையத்தால் பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிடும். இதையொட்டி, அரசின் திட்டங்கள் நிறுத்திவைக்கப்படும் வரிசையில் இந்த புறவழிச் சாலைத் திட்டமும் தானாகவே சேர்ந்துவிடும் என்று கருதியே முட்டுக்கட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு கூறியது:

பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில்தான் புறவழிச் சாலைத் திட்டத்துக்கு அரசு அனுமதியளித்தது. இந்தத் திட்டம் எந்தக் காரணங்களுக்காகவும் முடங்கிவிடக் கூடாது.

அதேநேரம், முதல் கட்டமாக அணைக்காட்டில் தொடங்கி ஆத்திக்கோட்டை வரை சாலை அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை.

எனவே, முதல் கட்டமாக ஆலடிக்குமுளையில் தொடங்கி சூரப்பள்ளம் வழியாக ஆத்திக்கோட்டை வரை சாலை அமைத்தால், தஞ்சையிலிருந்து பேருந்துகள், கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல் தவிர்க்க முடியும். இதன்மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும். இதை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக