சனி, 7 ஆகஸ்ட், 2010

மத்திய அரசு நிதியில் 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி

First Published : 07 Aug 2010 03:37:49 AM IST

Last Updated :


சென்னை, ஆக.6: தமிழகத்தில் 5 கி.மீ. தூரத்துக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளி இருக்கும் வகையில், மத்திய அரசின் நிதியில் புதிய பள்ளிகள் அமையவுள்ளன.

அதற்காக, எந்தெந்த பகுதிகளுக்கு உயர்நிலைப் பள்ளிகள் தேவை என்பதை ஆய்வு செய்யும் பணி இப்போது முனைப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் அதன் இறுதி முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமத்திலும் கல்வித் தேவை உள்ள இடங்களில் புதிய பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

அதன்படி, ஒரு கி.மீ. தூரத்துக்குள் தொடக்கப் பள்ளிகள், 3 கி.மீ. தூரத்துக்குள் நடுநிலைப் பள்ளிகள், 5 கி.மீ. தூரத்துக்குள் உயர்நிலைப் பள்ளிகள், 8 கி.மீ. தூரத்துக்குள் மேல்நிலைப் பள்ளிகள் படிப்படியாக அமைக்கப்படவுள்ளன. முதல் கட்டமாக உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி கூறியது: தமிழகத்தில் உள்ள சுமார் 63,000 கிராமங்களில் 5 கி.மீ. தூரத்துக்குள் எங்கெல்லாம் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன என்பது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அந்தத் தகவல்களைக் கணினியில் பதிவு செய்யும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அனைத்து பணிகளையும் அடுத்த ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முடிவை அடிப்படையாக வைத்து, 5 கி.மீ. தூரத்துக்குள் எத்தனை பள்ளிகள் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு, புதிய பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக